Saturday, December 10, 2005

 

நீட்டம் கண்ட முயல் ஆமை நீதிக் கதை

இந்தக் கதை எனக்கு மின்னஞ்சலில் வந்தது. யாரோ ஒரு புண்ணியவான் உபயோகமாகச் சிந்தித்திருக்கிறார். நமக்குத் தெரிந்த முயல் ஆமை, பாட்டி வடை சுட்ட கதை போன்ற குழந்தைகளுக்கான கதையை வைத்து கார்பரேட் குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஏதோ ஒரு நிறுவனப் பயிற்சியாளர் தயாரித்துள்ளார் என்று தெரிகிறது. நல்ல கதை. இன்று உலகமே கார்பரேட் மயமாகி வரும் இந்த காலத்தில் இந்தக் கதை உண்மையிலேயே பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி கதை :

முயலும் ஆமையும்

ஒரு முயலுக்கும் ஆமைக்குமிடையே யார் விரைவாக ஓடுகிறார் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களிடையே ஓட்டப்பந்தயம் நடத்தி அதன் வெற்றியாளரைத் தீர்மானிக்க அவை இரண்டும் ஒத்துக் கொண்டன.

தூரத்தை தீர்மானித்த பின் ஓட்டப் பந்தயம் துவங்கியது. முயல் அதி வேகத்தில் ஓடியது. ஆமையும் மனம் தளராமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும் நிதானித்தது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துச் செல்ல அதன் மனம் உந்தியது. ஆமையின் வேகம் நமது வேகத்தில் பத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது, அப்படியிருக்க நாம் கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து விட்டு பிறகு உற்சாகமாகப் பயணத்தைத் தொடர்வதால் தவறொன்றுமில்லை என்று அதன் உள்மனம் ஆதரவுக் குரல் கொடுக்க உட்கார்ந்த முயல் கண்கள் செருகி அசந்து தூங்கத் துவங்கியது.

வெகு நேரம் கழித்து நம்பிக்கையின்றி அந்த வழியே வந்து கொண்டிருந்த ஆமை முயல் தூங்கும் காட்சியைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது. தனது பயணத்தைத் தொடர்ந்த ஆமை சிறிது நேரத்தில் இலக்கை எட்டியது. அங்கேயே முயலுக்காகக் காத்திருந்தது, வெகு நேரம் கழித்து விழித்த முயல் மிகுந்த நேரமாகி விட்டதை அடுத்து அரக்கப் பரக்க இலக்கைக் குறிவைத்து ஓட ஆரம்பித்து. அங்கே அது பயந்தது போலவே ஆமை கர்வத்துடன் அமர்ந்திருப்பது கண்டு வெட்கித் தலைகுனிந்தது.

நீதி : நிதானம் அலட்சியத்தை வெல்லும்.

முயலும் ஆமையும் - 2

இச்சம்பவத்தில் மிகவும் மன வருத்தமுற்ற முயல் சுய பரிசோதனையில் இறங்கியது. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையும், அதனால் விளைந்த கர்வமும், அதனால் விளைந்த அசட்டையும் கவனக் குறைவுமே தனது தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்தது.

தன்னுடைய திறனை நிரூபிக்க மீண்டும் ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் உடனே ஒத்துக் கொண்டது. இம்முறை மனதை ஒருமுகப்படுத்தி ஓடிய முயல் ஆமைக்கு பல மணி நேரம் முன்னதாகவே இலக்கை அடைந்து விட்டது.

நீதி : நிதானம் நல்லது. எனினும் விழிப்புடன் இணைந்த வேகத்துடன் செயல்படுவது அதனினும் சிறந்தது.

முயலும் ஆமையும் - 3

இம்முறை ஆமை யோசிக்க ஆரம்பித்தது. இப்போதிருப்பது போல் போட்டி அமைப்பு இருக்கும் வரை முயலை தான் போட்டியில் வெல்வது என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்தது. சற்று யோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்த ஆமை மீண்டும் முயலை போட்டிக்கு அழைத்தது. முயலும் உடனே யோசிக்காமல் ஒப்புக் கொண்டது. இந்த முறை போட்டிக்குரிய பாதை சற்று மாற்றியமைக்கப்பட்டது. பாதையின் இடையே ஒரு ஓடை குறுக்கிட்டது. வேகமாக ஓடிய முயல் ஓடையின் அருகே வந்ததும் அதனை எப்படிக் கடக்கலாம் என்று சிந்திக்க வேண்டியதாயிற்று. வெகு நேரம் கழித்து வந்த ஆமை தன் திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்தது. அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ஓடையில் நுழைந்து நீந்தி அக்கரையை அடைந்தது.

நீதி : உங்கள் திறமை எந்த துறையில் இருக்கிறது என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள். அதற்குகந்த துறையில் தான் உங்கள் போட்டித் திறன் அதிகமாக இருக்கும், நீங்கள் வெற்றி பெற முடியும்.


முயலும் ஆமையும் - 4

இப்போது முயல் ஆமை இருவருக்குமே உண்மை விளங்கியிருந்தது, அவரவருக்கொரு திறமை இருக்கும், அதில் ஒருமுகப்பட்டு கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதைக் கண்டு கொண்டன. இப்போது இருவருக்கும் இடையே இருந்த காழ்ப்புணர்ச்சியும் மறைந்து விட்டிருந்தது. இருவர்களும் நண்பர்களுமாகி விட்டார்கள். இப்போதெல்லாம் நீர்ப்பாதைகளை கடக்க வேண்டியிருந்தால் முயல் ஆமை மீது அமர்ந்து செல்லும் காட்சியும், விரைவாகச் செல்ல வேண்டிய நேரங்களில் ஆமை முயல் மீது அமர்ந்து செல்லும் காட்சியும் இயல்பாகி விட்டது.

நீதி : ஒவ்வொரு துறையிலும் எல்லா விதமான திறமைகளுக்கும் தேவை இருக்கும், ஒரு நபரே எல்லாத் திறமைகளையும் கொண்டிருத்தல் இயலாது, பிறருடன் இணைந்து தான் நாம் பயணித்து வெற்றி காண முடியும். எனவே நமது குழுப் பண்பினை வளர்த்துக் கொண்டு மற்றவர்களின் திறமைகளையும் மதித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் கடினமான பாதைகளையும் சுலபமாகவும் விரைவாகவும் கடக்க முடியும்.


சுபத்துடன் முடிவடைந்துள்ள இக்கதைக்கு என்னுடைய கமெண்ட் :
பள்ளிக் கதைகளையே இன்னும் கற்க வேண்டிய நிலையிலுள்ள நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு இந்தக் கதை உபயோகப்படுமா என்று தெரியவில்லை. எப்படியோ இதே போன்று இன்னும் சில கதைகளையும் தமிழாக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

Comments:
உலகன் உங்களுக்கு எப்படி கிடைத்ததோ இந்த கதை! நிச்சயம் மாற்று சிந்தனைகளை விதைக்கிறது.
காக்காய் - பாட்டி கதையில் கூட தற்போது மாற்றம் வந்துள்ளதே! காக்க அழகாய் இருக்கிறாய் என்று சொன்னவுடன் வடையை கீழே விட்டது அந்தக் காலம். ஆனால் இந்தக் காக்காய் காலில் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடியதும், உடனே நீ ஒரு ஆட்டம் போடு என்று நரி கூறியது. காக்காய் வடையை லாவகமாக வாயில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டதும் மறு சிந்தனைகள். எப்படியோ பாட்டிதான் ஏமாந்தார்.
இது போன்ற வித்தியாசமான சிந்தனைகள் பதியப்பட வேண்டியதே!
நன்றி
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]