Friday, January 13, 2006

 

ஆளுமையின் இலக்கணம் - விவேகானந்தர்

விவேகானந்தரை நிறைய பேர் வழக்கமான சாமியார் போல் நினைத்து கொண்டிருப்பார்கள், அவரது காவி உடையணிந்த தோற்றமும் அது போன்ற நினைக்க தூண்டுவது இயல்பு. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்களோ அல்லது அவரது உரைகளை உட்கொள்பவர்களோ அவர் மூட நம்பிக்கைகளுக்கு முட்டு கொடுக்கும் சாமியார் அல்ல வாழ்வு முறைகளுக்கு வழி சொன்ன மெய்ஞானி என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்படி அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் தான் ஒரு இஸ்லாமியராகவே வாழ்ந்து அந்த மதத்தினை உணர்ந்தாரோ அதுபோல அத்தனை மதங்களையும் ஆழப் படித்து அத்தனை நாடுகளின் சூழலையும் உணர்ந்து சாதி மத பேதமின்றி மனிதம் உயர வழி சொன்னவர் விவேகானந்தர்.

அதனால் தான் அமெரிக்காவில் மதங்களுக்கான பாராளுமன்றத்தில் அவர் உரையாற்ற சென்ற போது ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் இவரை பற்றி கூறும் போது, "நமது நாட்டின் அத்தனை பேராசிரியர்களின் அறிவையும் ஒன்று சேர்த்தாலும் இந்த ஒரு மனிதனின் அறிவுக்கு ஈடாகாது" என்று கூறினார். இந்த நூற்றாண்டு துவக்கம் வரையே இந்தியாவை பற்றி வெளி நாடுகளில் என்ன அபிப்ராயம் இருந்தது என்பது தெரியும். அப்படியிருக்க ஏறக்குறைய 110 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்த ஒரு துறவியை பார்த்து அமெரிக்க பேராசிரியர் ஒருவர் பார்த்த சில தினங்களுக்குள் இவ்வாறு கூற வேண்டுமென்றால், அது தான் உண்மையான ஆளுமை. அவர் சொன்னதற்கேற்ப உலகின் பல்வேறு மத கலாச்சாரங்களை சேர்ந்த சுமார் 7000 பேர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் விவேகானந்தரது பேச்சு உயர்ந்த இடத்தை பிடித்தது என்பதும், இந்து மதம் என்பது மூடப் பழக்க வழக்கங்களின் மொத்த தொகுப்பு என்று எண்ணியிருந்த மேற்கு உலகத்தின் மாயை மறைந்தது என்பதும் சரித்திரம்.

அவரின் சில சிந்தனைகளை பாருங்கள் :

"தன்னம்பிக்கை கொண்ட சில மனிதர்களின் சரித்திரம் தான் உலகத்தின் சரித்திரமாகிறது, அந்த தன்னம்பிக்கையே உள்ளிருக்கும் தெய்வீக தன்மையை வெளிக்கொண்டு வருகிறது."

"ஒரே ஒரு சிந்தனையை எடுத்து கொள்ளுங்கள், அந்த ஒரு சிந்தனையை உங்கள் வாழ்வாக்குங்கள் - அதனை பற்றி நினையுங்கள், அதனை பற்றி கனவு காணுங்கள், அந்த சிந்தனையிலேயே வாழுங்கள், உங்களின் மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகமும் அந்த சிந்தனையால் நிரம்பட்டும், மற்ற சிந்தனைகள் உங்களை விட்டு விலகட்டும், இது தான் வெற்றிக்கான வழி".

"என் வாழ்க்கையில் நான் கற்று கொண்ட மிகப்பெரிய பாடம் கடமையின் விளைவில் காட்டும் அதே கவனத்தை கடமையாற்றும் வழியிலும் காட்ட வேண்டும் என்பது தான். வெற்றியின் ரகசியம் அத்தனையும் இந்த சூத்திரத்தில் தான் அடங்கியுள்ளதாக தோன்றுகிறது".

"கோழைகளும் முட்டாள்களுமே , 'இது விதியின் செயல்' என்று சொல்வதாக ஒரு சமஸ்கிருத பழமொழி சொல்கிறது. திடமுள்ள மனிதர்கள் நிமிர்ந்து நின்று 'என் விதி என் கையில்' என்று முழக்கமிடுகிறார்கள். வயதாக வயதாக தான் மனிதன் விதியை பற்றி அதிகம் நினைக்கிறான். இளைஞன் பெரும்பாலும் ஜோசியத்தின் பக்கம் வருவதில்லை".

இப்போது புரியுமே, நாம் ஏன் அவரது பிறந்த தினத்தினை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம் என்று. அவரது கருத்துகள் உலகம் முழுவதும் அள்ளிப் பருக வேண்டிய அமுத மொழிகள். 'பரிசுத்தமாக இருப்பதும் பிறருக்கு நன்மை செய்வதுமே உலகின் அத்தனை வழிபாடுகளின் சாரம்' என்ற அவரது உயர்ந்த தத்துவத்தினை பின்பற்ற முயற்சிப்பதே அவரை நாம் நினைவு கூறும் சிறந்த வழியாக இருக்கும்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]