Thursday, December 01, 2005

 

உணர்வூட்டும் கதை - 1

இந்த கதைகள் சமீபத்தில் மாம்பலம் டைம்ஸில் படித்தவை. உபயம் திரு ரா.கி.ரங்கராஜன்.

ஒரு சாலையில் கார்கள் வேகமாகப் பறந்து கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பெரிய கல்லொன்றை எடுத்து ஒரு காரின் மீது அடித்தான். கண்ணாடி உடைந்தது. கார் ஓட்டியவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து, 'ஏண்டா கல்லடித்தாய்?!'" என்று அதட்டினார். ' காரை நிறுத்தும்படி கையைக் காட்டிக் கொண்டேயிருந்தேன். யாரும் நிறுத்தக் காணோம். அதனால் கல்லடித்தேன். நீங்க நிறுத்தினீங்க', என்றான் சிறுவன். சொல்லிவிட்டு, 'ஏன் காரை நிறுத்தணும் என்று கேட்பீங்க. என்னோடு வாருங்கள் ', என்று சிறிது தூரம் அழைத்துச் சென்றான். 'பாருங்கள் ' என்று காட்டினான்.

அங்கே சாலையின் ஓரமாக இருந்த சரிவில் ஒரு சக்கர நாற்காலி கவிழ்ந்து கிடந்தது. இவனை விட வயதில் சின்னவனான ஒரு சிறுவன் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு ஒரு கால் இல்லை. 'என் தம்பி அவன். சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தேன். ஏதோ ஒரு கல்லில் இடறி வண்டி விழுந்திட்டுது. வண்டியை நிமிர்த்தி, சாலைக்கு அதைக் கொண்டு வர என்னால் முடியவில்லை. பெரியவங்க யாராவது உதவிக்கு வர மாட்டாங்களா என்று தான் கார்களை நிறுத்தப் பார்த்தேன்' , என்று அவன் விளக்கினான்.

கார் ஓட்டி வந்தவர் வண்டியை நிமிர்த்தி, காலில்லாத சிறுவனை அதில் உட்கார்த்தி, சாலைக்குக் கொண்டு வந்து வைத்து விட்டு காரை ஓட்டிக் கொண்டு சென்றார். ஆனால், அதன் பிறகு உடைந்த கண்ணாடியை மாற்றவில்லை. அப்படியே வைத்திருந்தார் . ரொம்ப வேகமாக ஓட்டக் கூடாது என்பதும், யாரும் உதவி கேட்டுக் கைகாட்டினால் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்பதும் என்றைக்கும் தனக்கு ஞாபகம் இருக்க வேண்டும் என்பதற்காக.

அந்தக் கட்டுரையில் இன்னும் 2 சிறந்த கதைகள் இருந்தன . அவை இனி வரும் பதிவுகளில்.

கதைக்கு என்னுடைய கமெண்ட் :

இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு பராசக்தி படம் ஞாபகத்திற்கு வந்தது . சிவாஜி பட்டினியால் வாடும் போது யாரும் உதவி செய்ய மாட்டார்கள். அவர் பைத்தியக்காரன் போல் நாடகமாடி உணவுப் பொருட்களைப் பறித்து உண்பார்.

இப்போதெல்லாம் எங்கு கார் நின்றாலும் பிச்சைக்காரக் குழந்தைகள் தொல்லை தரும் சூழலில் நிறுத்தாமல் செல்பவர்களையும் என்ன குற்றம் சொல்ல முடியும். இதில் சில விஷமிகள் வேறு நடு வழியில் நாடகமாடி பணம் பறிக்க குழந்தைகளையும் சிறுவர்களையும் பலியாடாக்குகின்றனர். ம், கழிவிரக்கம் தான் தோன்றுகிறது.



This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]